பல்கலை பதிவாளர் பதவி வயது வரம்பு குறித்து சர்ச்சை எழுந்துள்ளதால், தமிழக
உயர்கல்வி துறையில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், கல்லுாரி
பேராசிரியர்களுக்கு, 58 வயதும்; பல்கலை பேராசிரியர்களுக்கு, 60 வயதும்,
ஓய்வு வயதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பல்கலை பதிவாளர், தேர்வு
கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு, நிர்வாக பணியாளர் சட்டப்படி, 58 வயது, ஓய்வு
வயதாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, திருவள்ளுவர் பல்கலை ஆகியவற்றில்
மட்டும் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு, 60 வயது வரை
பதவியில் நீடிக்க, விதிகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இந்த விதிகள், நிர்வாக
பணியாளர் சட்டத்திற்கு முரணானது என, புகார்கள் எழுந்துள்ளன. இப்பல்கலைகளை
போல் மற்ற பல்கலைகளிலும் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி
பதவிக்கு, 60 வயது வரை பதவியில் இருக்க, விதிகள் ஏற்படுத்த வேண்டும் என,
நெருக்கடி எழுந்துள்ளது.இதை அனுமதித்தால், ஒவ்வொரு துறையிலும் வயது வரம்பை
உயர்த்த கோரிக்கை எழும். அதனால், பொருளாதார அளவிலும், பதவி உயர்வு
வழங்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்படும்.இந்நிலையில், இந்த பிரச்னை
தொடர்பாக, தமிழக கவர்னர் அலுவலகத்தில் இருந்து உயர்கல்வி அதிகாரிகளிடம்
தெளிவான அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு
பல்கலைகளின் பேராசிரியர்கள், சிண்டிகேட் கூட்டங்களில் இப்பிரச்னையை எழுப்ப
முடிவு செய்துள்ளனர். எனவே, மூன்று பல்கலைகளின் அதிகாரிகளின் வயது வரம்பை,
58 ஆக குறைக்க, உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. ஆனால், அரசியல்
ரீதியாக பலர் நெருக்கடி கொடுப்பதால் முடிவு எடுப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. .jpeg)



