
புதுடில்லி: மாணவர்களின் பாதுகாப்பு கருதி நீட் மற்றும் ஜே.இ.இ.,
தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மருத்துவ படிப்பில் சேருவதற்கான
நீட் நுழைவுத் தேர்வை, ஜூலை, 26ம் தேதி நடத்த, என்.டி.ஏ., எனப்படும் தேசிய
தேர்வு முகமை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதேபோல், ஐ.ஐ.டி., போன்ற உயர்
கல்வி நிறுவனங்களில் இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் கல்வி படிப்பதற்கான,
ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வை, ஜூலை 18 - 23ம் தேதிகளில் நடத்தவும்
முடிவு செய்யப்பட்டிருந்தது.கொரோனா பாதிப்பு குறையாததால், இந்த இரண்டு
நுழைவுத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.இந்நிலையில் செப்டம்பர் இறுதியில்
தேர்வுகள் நடைபெறும் எனவும் ஒத்திவைக்கும் எண்ணம் இல்லை என மத்திய மனிதவள
மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் அமித் காரே சமீபத்தில்
கூறினார்.இந்நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு
கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கொரோனா பரவல் குறையாத நிலையில் தேர்வுகள் நடத்துவது
சரியாக இருக்காது. மாணவர்களின் உயிர் பாதுகாப்பு கருதி தேர்வுகளை தள்ளி
வைக்க வேண்டும் என கடிதத்தில் கூறியுள்ளார்.