Skip to content

TAMILNADU GOVERNMENT SCHOOL EDN | VISUAL BOOKS INTROCUCED:

பிளஸ் 2, 10ம் வகுப்புக்கு 'VISUAL' பாடப்புத்தகம்!
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, 'வீடியோ' பதிவுடன் கூடிய, பாடங்கள் தயாரிக்கப்படுகின்றன. மாணவர்கள், பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், 'விஷுவல்' பாடப்புத்தகம் உருவாக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
ஏற்கனவே, முப்பரிமாண முறையில், பாடங்களை படத்துடன் படிக்கும், 'மொபைல் ஆப்' வசதியை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்தது.இந்நிலையில், அனைத்து பாடங்களையும், வீடியோ வடிவில் கொண்டு வர, பணிகள் துவங்கப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக, பாடத்தில் ஆர்வமும், அதை வீடியோவாக மாற்றும் திறனும் உடைய ஆசிரியர்களின் விபரங்களை அனுப்பி வைக்க,பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து, மாநில கல்வியியல் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்களை படித்து, அதை புரிந்து தேர்வு எழுதுவதில் சிரமம் உள்ளது; ஆசிரியர்களும் அனைத்து பாடங்களையும் நடத்துவதில்லை; நேரமின்மையால், சில பாடங்களை விட்டு விடுகின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில், மாணவர்கள், வீடியோ காட்சியுடன் பாடத்தை கற்கலாம். அத்தகைய மாணவர்களுக்கான, சிறப்பு புத்தகமாக,இந்த வீடியோ பதிவுகள் இருக்கும். கோடை விடுமுறைக்கு பின், வீடியோ தயாரிப்பு பணி துவங்கி, அடுத்த கல்வியாண்டுக்குள் சோதனை பாடத்திட்டம் தயாராகும்.இவ்வாறு அவர் கூறினார்.