ஊரடங்கில்
உலகம் முடங்கிக்கிடந்த போதும், சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்குக் கல்விப்
பணிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு சேவைகளிலும் ஈடுபட்டுவரும் சில
ஆசிரியர்களின் அனுபவங்கள்
திலீப், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்,
சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்
எங்கள்
பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத்
தயாராவதற்காக, ஒவ்வொரு வினாவிற்கான பயிற்சியை வீடியோக்களாக எடுத்து
யூடியூப்பில் பதிவேற்றம் செய்துவருகிறேன். அந்த லிங்க்கை மாணவர்களுக்கு
அனுப்பிவிடுவேன். இது மாணவர்கள் தடையின்றி கற்பதற்கு உதவியாக
அமைந்துள்ளது.
வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கணினியைப்
பயன்படுத்துவதற்கான பயிற்சியை NCERT நடத்திவருகிறது. அதில் கருத்தாளராகப்
பங்கேற்று இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி
வழங்கியுள்ளேன். தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும்
இணையவழியில் கற்பிக்கும் பயிற்சிகளை அளித்துள்ளேன். வகுப்பறைக்குத்
தேவையான காணொலிகளைத் தயாரித்தல், கைப்பேசியைப் பயன்படுத்தி திறம்பட
கற்பித்தல், தனித்திறனை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஆசிரியர்கள்
பயிற்சிகள் பெற்றார்கள்.
அடுத்த ஆண்டு வகுப்பிற்குத் தேவையான
வரைபடங்களை கணினியில் தயாரித்துள்ளேன். படங்களின் வழியாக மாணவர்களுக்குப்
பாடம் நடத்தும்போது எளிதாகப் புரியும். இருபது ஆங்கில ஆசிரியர்களை
ஒருங்கிணைத்து ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அதன்மூலம் இந்தியா முழுவதும்
உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் என
1150க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி
அளித்துவருகிறோம்.
ஆங்கில மொழிப்பயிற்சி தொடர்பான பாடங்களையும்
தேர்வுகளையும் தயாரித்து https://spokenenglishtn.blogspot.com என்ற
இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறோம். அதில் ஆசிரியர்கள் படிப்பதற்கான
பாடங்களைப் புரிந்துகொள்வதற்கான வீடியோ மற்றும் அவர்கள் பேசுவதற்கான
செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்திருக்கிறோம். ஆன்லைனில் தொடர்ந்து
பயிற்சி வழங்குவது மற்றும் பேசவும் வாய்ப்புகள் தருவதன் மூலம்
ஆசிரியர்களின் பேச்சுத்திறன் மேம்பட்டுவருவதை கண்கூடாகப்
பார்க்கமுடிகிறது.
ஏ. அருண்குமார், பட்டதாரி ஆசிரியர்,
சிந்தகமானிபெண்டா, திருப்பத்தூர் மாவட்டம்
நான்
ஒரு மலைக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப்
பணியாற்றிவருகிறேன். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளி,
கல்லூரி மாணவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்
பணிகளில் ஈடுபட்டேன். மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் வழிகாட்டுதலின்படி,
வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள், சிறிய வீடியோ
பதிவுகள், ஜிஐபி படங்கள் மூலம் தினந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.
பொதுமக்களிடம்
நேரடியாகத் தொடர்புகொண்டு தெளிவை ஏற்படுத்த, காலை நேரங்களில் உழவர்
சந்தையில் தன்னார்வலராகப் பணியாற்றினேன். அங்கு வரும் மக்களிடம் முகக்கவசம்
அணிவதன் அவசியம், சமூக தனிநபர் இடைவெளியின் அவசியம் குறித்தும் விளக்கும்
பணிகளில் ஈடுபட்டுவருவதுடன் ஒவ்வொரு நாளும் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு
இலவசமாக முகக்கவசங்கள் வழங்கினேன்.
அனைவருக்கும் பயன்படும் கொரோனா
சார்ந்த வினாடி வினா செயலியினை உருவாக்கினேன். அதன் வழியாக, தற்போது 2
ஆயிரத்துக்கும் அதிகமானோர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். வாணியம்பாடி
ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மருத்துவமனைகளில் தன்னார்வப் பணியும்
தொடர்கிறது. நியாயவிலைக் கடைகளில் சமூக இடைவெளி பற்றிய சேவையில் கடும்
வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றி வருவதில் மனம் நெகிழ்கிறது.
ஜி. ஆனந்தகண்ணன், எம். விஜயகுமார்,
பட்டதாரி ஆசிரியர்கள், கள்ளக்குறிச்சி
தமிழகம்
முழுவதும் ஊரடங்கு நேரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயனுள்ள
வகையில் ZOOM ஆப்ஸ் மூலமாக பயிற்சிகளை வழங்கிவருகிறோம். அதாவது தினமும் 100
ஆசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் வழியாக கற்றல் – கற்பித்தலை எவ்வாறு
வகுப்பறையில் மேற்கொள்வது பற்றிய ஆன்லைன் ஐசிடி (இன்ஃபர்மேஷன் அண்ட்
கம்யூனிக்கேஷன் டெக்னாலஜி) வகுப்புகளை நடத்திவருகிறோம். ஏப்ரல் முதல்
தேதியன்று தொடங்கி, இன்றுவரை 18 வகுப்புகள் நடத்தியதன் மூலம் 1794
ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளனர்.
பயிற்சிக்காக கூகுள் ஃபார்ம் மூலம்
பதிவு செய்த ஆசிரியர்கள், பேஸிக், இன்டர்மீடியட், அட்வான்ஸ்டு என
பிரிக்கப்பட்டு, தொழில்நுட்பம்வழி கற்பித்தலில் அவர்கள் எந்த நிலை என
கண்டறிந்து கற்பிக்கபடுகிறது. தினம் ஒரு கல்வி மென்பொருள் மற்றும்
ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் என பல தலைப்புகளில் கற்பிக்கப்பட்டு, தினந்தோறும்
ஆசிரியர்கள் தெரிந்துகொண்டதை ஆர்வமுடன் புராஜெக்ட் செய்து
ஒப்படைக்கிறார்கள்.
இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள்
அனைவருமே நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குக்
கற்பிக்கும் அளவுக்கு தெரிந்துகொண்டோம் என்று மகிழ்ச்சியுடன்
தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆன்லைன் பயிற்சி முடியும்போதும்,
ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் சர்டிபிகேட் ஜெனரேஷன்
மற்றும் மேனுவல் சர்டிபிகேட் ஜெனரேஷன் என நவீன தொழில்நுட்பம் மூலம்
ஆன்லைன் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
மா.லோகநாதன்,
இடைநிலை ஆசிரியர், ஈரோடு மாவட்டம்
கொரோனா
தொற்றால் முதன்முதலில் பாதிக்கப்பட்டது எங்கள் ஈரோடு மாவட்டம். எனக்கு
சமூகப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். அதனால் மக்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னார்வலராகப்
பணியாற்ற முன்வந்தேன். ஈரோடு மாநகராட்சி மூலம் கமலா நகர் பிரதான சாலைப்
பகுதியில் குடியிருக்கும் மக்களை கொரோனா பாதிக்காத வண்ணம் விழிப்புணர்வு
மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஏப்ரல் முதல் இன்று வரை தொடர்ந்து
செய்துவருகிறேன்.
வாட்ஸ்
ஆப் குழு அமைத்து மக்களின் உடல்நலன் சார்ந்த கண்காணிப்பு மற்றும்
அத்தியாவசியப் பொருட்களின் தேவைகளை அறிந்து, என்னால் இயன்றவரை
பூர்த்திசெய்துவந்தேன். தினமும் மக்கள் எவருக்காவது இருமல், தொடர் சளி,
மூச்சு விடுவதில் பிரச்சினை, ரத்த அழுத்தம் இருக்கிறதா, கர்ப்பிணிகள்
இருக்கிறார்களா என்று விவரங்களைச் சேகரித்தேன். அத்துடன் செல்போன் எண்
பெற்று வாட்ஸ் ஆப் மூலம் அடிப்படை மருத்துவத் தகவல்களை அனுப்பிவருகிறோம்.
நேரடியாகவும் தகவல்களை மக்களிடம் சேர்த்துவருகிறேன். கொரோனா தொடர்பான
சந்தேகங்களுக்கு முறையான விளக்கமும் அளிக்கப்படுகிறது.
எங்கள்
வாட்ஸ்ஆப் குழுவில் சுகாதார நிலைய அதிகாரிகள், செவிலியர், மருத்துவர்களை
இணைத்துள்ளேன். மக்களின் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன்
கண்டறிந்து, உரிய பரிசோதனையை செய்து, மருத்துவர்கள் மூலம் மருந்துகளையும்
வழங்குகிறோம். என்னைப் போன்ற பலரின் தன்னார்வத் தொண்டுகளால், ஈரோடு
மாவட்டம் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்து பச்சைக்கு மாறியது உற்சாகம்
அளிக்கிறது.
ச. மாலதி,
அரசு பட்டதாரி ஆசிரியை, வீரகேரளம்புதூர், தென்காசி மாவட்டம்
ஊரடங்கு
நாட்களில் ஆசிரியர்களாகிய நாங்கள் கற்றுக்கொண்டும் கற்பித்துக் கொண்டும்
வருகிறோம். அடுத்த கல்வியாண்டில் மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டிய
பாடங்களைத் தயாரித்துவருகிறோம். பல்வேறு பாடங்களை சிறந்த முறையில்
கற்பிப்பதற்கு வசதியாக காணொலிக் காட்சி, பவர் பாயிண்ட் போன்றவற்றை
தயாரிப்பது, தீக்சா மற்றும் இதர செயலிகளில் இருந்து பதிவிறக்கம் செய்வது
எப்படி உள்ளிட்ட பல பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கிவருகிறோம்.
வினாக்களைத்
தயாரிப்பது, அவற்றை ஆன்லைனில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது, தேர்வுகள்
நடத்துவது தொடர்பாக கல்வியாளர்களும், அனுபவமிக்க ஆசிரியர்களும் பயிற்சி
அளிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களும் ஆர்வமாக கலந்துகொண்டு
பயன்பெறுகிறார்கள். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு பாடத்தை தீக்சா
ஆப்ஸ் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறேன். இன்றைய நிலையில் ஆன்லைன்வழி கல்வி
என்பது கிராமம், நகரம் என்ற எல்லைகளைக் கடந்து அனைத்து மாணவர்களுக்கும்
மிகச்சிறந்த தோழனாக இருக்கிறது.
-சுந்தரபுத்தன்