Skip to content

Deputy-Chief-Minister-post-to-O-Panneerselvam:

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி: அ.தி.மு.க. அணிகள் நாளை இணைப்பு:

ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி: அ.தி.மு.க. அணிகள் நாளை இணைப்பு
சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுபட்டு கிடந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அ.தி.மு.க. அணிகள் இணையுமா? என 7 மாதங்களாக தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இணைப்பு தொடர்பாக பலமுறை ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று முடிவு எட்டுவதில் சிக்கல் நீடித்து வந்தது. இப்போது சிக்கல் தீர்ந்து நாளை இணைப்பு நடைபெறுகிறது.

ஓ.பன்னீர் செல்வம் அணியினர் விதித்த பெரும்பாலான நிபந்தனைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி ஏற்றுக்கொண்டது. குறிப்பாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடம் ஆக்குவது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துவது ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

அதற்கு முன்னதாக டி.டி.வி.தினகரனை கட்சியை விட்டு ஓரங்கட்டுவதற்காகவும் அவரது நியமனம் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியினர் வரவேற்பு தெரிவித்தனர்.

அடுத்த கட்டமாக அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப்பின் கட்சி மற்றும் ஆட்சியில் யார் யாருக்கு என்ன பதவிகள்? என்பது பற்றி ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

எடப்பாடி பழனிசாமியே முதல்-அமைச்சராக நீடிப்பார் என்றும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி மற்றும் கட்சியை வழி நடத்திச் செல்லும் குழுவுக்கு தலைமை பொறுப்பு ஆகியவை வழங்குவது என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செம்மலை, கே.பாண்டியராஜன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி, கே.பி.முனுசாமி போன்ற மற்ற நிர்வாகிகளுக்கு எம்.பி. பதவி என்றும் பேச்சு நடத்தப்பட்டது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் கடந்த 3 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். இதேபோல் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேச்சு நடத்தினார்கள். முதலில் போரூரில் உள்ள மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பிறகு சென்னையில் முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டில் மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமைச்சர்கள் சந்தித்து பேசினார்கள்.

இதேபோல், ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த ஆர்.வைத்திலிங்கம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரு அணியினரும் பேச்சுவார்த்தைக்கு கட்டுப்படுவதாக ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்தனர்.

சமரச உடன்படிக்கையின்படி எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நீடிப்பார், ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தில் வழக்கு முடிந்த உடன் கட்சி பதவி பற்றி பேசிக் கொள்ளலாம் என்றும் அதுவரை கட்சியை வழிநடத்த ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் குழு அமைத்து செயல்படலாம் என்றும் முடிவாகி உள்ளது.

இதையடுத்து அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பற்றி நாளை (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படுகிறது. நாளை மாலை இரு அணியையும் சேர்ந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் வருகிறார்கள். அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள்.

பின்னர் அவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்து இணைப்பு பற்றி அறிவிப்பு வெளியிடுகிறார்கள். சமரச உடன்பாடு மற்றும் பதவிகள் பற்றிய அறிவிப்பும் அப்போது வெளியிடப்படுகிறது.

அதன்பிறகு இரு அணி நிர்வாகிகளும் தலைமைக் கழகத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இணைப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைமைக் கழகத்தில் நாளை நடைபெறும் அணிகள் இணைப்பு அறிவிப்பு மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.