Skip to content

கொத்தவாசல் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை : கிராம மக்கள் ஊர்வலமாக வந்து வழங்கினர்:

பெரம்பலூர்: கொத்தவாசல் அரசு பள்ளிக்கூடத்திற்கு தேவையான பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து அன்பளிப்பாக வழங்கினர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெரியவெண்மணி ஊராட்சிக்கு உட்பட்டது கொத்தவாசல் கிராமம். இவ்வூரில் தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தரம் உயர்த்தப்பட்டு தற்போது நடுநிலைப்பள்ளியாக உள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராக இளவழகன் என்பவர் பொறுப்பேற்றபிறகு இப்பள்ளி தனியார் பள்ளிகளை ஓவர்டேக் செய்து தடம் பதித்ததால் இவ்வூரிலுள்ள பள்ளி வயது மாணவ,மாணவியர் 146 பேர்களில் 140 பேர் தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல் இப்பள்ளியிலேயே படித்து வருகின்றனர்.
இதற்கு காரணம் இளவழகன் தனது சொந்த பணத்தில் ரூ.2 லட்சம் செலவழித்து, கம்ப்யூட்டர் யுகத்திற்கேற்ற ஸ்மார்ட் கிளாஸ் ரூம்களை அமைத்ததுதான். தரமான பாதைவசதி கொஞ்சம்கூட இல்லாத கொத்தவாசல் கிராமத்தில் 10 கம்ப்யூட்டர்கள், 2 எல்சிடி புரொஜெக்டர்கள் கொண்டு ஆன்லைன் வகுப்பறை அமைத்து கொடுத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி, மாணவ, மாணவியரை சரளமாக ஆங்கிலத்தில் பேசச்செய்து, மாவட்ட அளவில் வியக்கவைத்ததால் கொத்தவாசல் பள்ளியென்றால் மாவட்ட அளவில் பிரபலமானது. இதற்கு மகுடம் சூட்டும் விதமாக மணமகளுக்கு சீதனமாக வழங்கும் சீர்வரிசை யைப்போல் உள்ளூர் கிராமப்பொதுமக்கள், ரூ2லட்சத்திற்கு சீர்வரிசைப் பொருட்களை நேற்று ஊர்வலமாக எடுத்துவந்து, வாழ்த்தி வழங்கி சென்றது மாவட்ட அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக 4 பீரோக்கள், 4 டேபிள்கள், 2 கம்ப்யூட்டர் டேபிள்கள், 3 லைரபரி ரேக்குகள், 10 எஸ் டைப் சேர்கள், குடிநீர் நிரப்பும் 10 சில்வர் டிரம்கள், 40 சேர்கள், 150 திருக்குறள் புத்தகங்கள், 40 லிப்கோ டிக்ஸ்னரிகள், சாக்பிஸ், தம்ளர், குடம், சொம்பு என தங்களுக்கு விரும்பியவற்றை, பள்ளிக்கு தேவையானவற்றை என பார்த்துப்பார்த்து ரூ2லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வாங்கியுள்ளனர். அவற்றை நேற்று பஸ்டாண்டிலிருந்து மேளதாளத்துடன் பழம், பூ, வெற்றிலைப்பாக்கு சகிதமாக ஊர்வலமாக பள்ளிக்குக்கொண்டுவந்து, பாரம்பரிய வழக்கப்படி சீராக வழங் கியுள்ளனர்.

அதனை குன்னம் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா, பள்ளித்தலைமை ஆசிரியர் இளங்கோவன் உள்ளிட்டோரிடம் கிராம தர்மகர்த்தா நடேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாரிமுத்து உள்ளிட்டோர் வழங்கியுள்ளனர். அப்போது மார்ச் மாத வைர விழாவையொட்டி ரூ.6 லட்சத்தில் மல்டி பர்பஸ் மீட்டிங் ஹால் பள்ளிக்கு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதனை பார்த்த குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன் தனது பங்களிப்பாக ரூ.2.50 லட்சம் ஒதுக்கி, வகுப்பறைகளுக்கு ஏசி, இன்ட்ராக்டிவ் போர்டு எனப்படும் தொடுதிரை பலகை அமைத்திட உறுதியளித்துள்ளார்.