Skip to content

அதிசய பறவை அதுவும் நம்ம ஊர் பறவை-ஆஸ்திரேலியா அல்ல வாங்க பார்க்கலாம் :

"அரிய வகை ஆஸ்திரேலியப் பறவை நம்மூரில் அகப்பட்டது" என்னும் அடைமொழியிட்டு  அவ்வப்போது செய்திகளில் வரும்.
பாவம் அவர்களுக்குத் தெரியாது இது நம்மூர் பறவை என்று.
சங்க இலக்கியத்தில் கூகை என்று அழகு தமிழில்
அழைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
திருக்குறளில் கூட கூகைப் பற்றி வரும்.
"பகல்வெல்லுங் கூகையை காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது".(குறள் 481)
இதில் கூகையென வள்ளுவர் சுட்டுவது கூகை எனும் வெண் ஆந்தையே ஆகும்.
ஆம் நம்மூரில் காணப்படும் ஆந்தை இனத்தில் இதுவும் ஒரு வகைதான் கூகை (அ) வெண் ஆந்தை- (Barn owl)

கொஞ்சம் வெள்ளையாய் டிப்டாப்பாய் வரும் ஆசாமியைப் பார்த்து  நாம் "வெள்ளைகாரன் மாதிரி இருக்காண்டா!" என்பது சொல்வதுதான் இந்த ஆந்தை விஷயத்திலும் நடந்திருக்கிறது.. 
இதய வடிவ வெண்மை முகம் தனித்த அடையாளமாய் உள்ளது கூகைக்கு....இந்த இதய வடிவம் சிறு தூவிகளால் உற்றுப்பார்த்தால் தனியே திட்டுபோல தெரிகிறது..பழுப்பு, சாம்பல் கலந்த இறக்கைகள், வெண்மை நிற மார்பு, வயிறு..இப்படி அழகான பறவையை கோட்டான் என்று கூறுவர்..ஆனால் இதை வசவு சொல்லுக்குத்தான் பயன்படுத்துவர் நம்மவர்கள்..
"ஏண்டா கூகையாட்ட முழிச்சிட்டிருக்கிறே ?"- இப்படி நம்மூரில்  ஒரு வசவுச்சொல் இருக்கு..
கூகைகள் நம்முடைய நண்பர்கள் என்று  நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தாருங்கள்..
கூகை என்னும் பெயரில் கோ.தர்மன் ஐயா ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்..
கூகை என்கிற கோட்டான் இடப்பெயற்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை கொண்டது எனினும் அந்த வலிமையைத் தன் உணவுக்காக அன்றி வேறு சமயங்களில் பெரிதும் பயன்படுத்துவதில்லை. இருளில் வெளிவந்து உலவும் இயல்புடையது. பகலிலோ அஞ்சி ஒடுங்கித் தன் பொந்துக்குள் கிடக்கும். கூகையின் தோற்றத்தை அருவரப்பாகப் பார்ப்பதும் , கோரம் என்று முத்திரை குத்துவதும், அதைக் காணுதலையும் அதன குரல் ஒலி கேட்பதையும் அபசகுனம் என்று கருதுவதும்தான் இந்தச் சமூகத்தில் பாரம் பரியமாகத் தொடர்ந்து வரும் பொதுப் புத்தி..
ஆனால் உண்மையில் இயற்கைச் சமநிலையைப் பேணிக் காப்பதில் இந்த கூகைகள் நமக்கு உதவுகின்றன.
ஒரு கூகை ஆந்தை ஆண்டுக்கு சராசரியாக ஆயிரம் எலிகள் வரை பிடித்துத் தின்னும்...
இவ்வாறு நமக்கு நண்பனாய் இருக்கிற கூகைகளை மந்திரம், மாந்திரீக செயல்பாடுகளுக்கு வேட்டையாடி பலிகொடுப்பது மக்களின் அறியாமையையே காட்டுகிறது..வடமாநிலங்களில் இந்தக் கொடூர வழக்கம் அதிகம்..
உயிர்ச்சூழலை சமன்படுத்த இயற்கை ஒவ்வொரு உயிர்களையும் உலகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் தட்பவெப்ப புவியமைப்பிற்கேற்ப ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி வலுவான காரணத்திற்காக, இந்த பூமியில் மனிதர்களுக்கு முன்னரே உருவானதுதான. இந்த கூகைகள்  மனிதனுக்கு முன்னரே உருவானதால் இவை  மனிதர்களைக் கொள்ள படைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்...
இவ்வளவு நன்மைகளை இந்த மனிதர்களுக்கு செய்யும் கூகைகளையும் ஆந்தைகளை போற்றி அவற்றின் வாழிடங்களை சிதைக்காமல் பாதுகாக்கனுமா ? இல்லையா???
அவசியம் சொல்லுங்கள்.....

தரவுகளுக்கு நன்றி : கலைச் செல்வன் மற்றும் இராமமூர்த்தி அண்ணா..

நன்றி:இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்கள் மட்டும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

நன்றி: திரு ஆற்றல் பிரவீன் குமார். அவர்கள்.