Skip to content

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்:

 

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் பயில இடம் கிடைத்தும், அதிகளவு கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும், இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் என்றாலும், மறைமுகமாக 3 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.

சமூகநீதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு, கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க உதவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கு, அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப் படுவதையும் தடுக்கலாம் என்றும், அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடுசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.