Skip to content

மதுரை: அன்று அரசுப் பள்ளி மாணவர்... இன்று பலபேருக்கு வேலைகொடுக்கும் ஐடி நிறுவன உரிமையாளர்!

 

அரசுப் பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர் இன்று அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு மென்பொருள் தயாரித்து வழங்கி தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்து வருகிறார். அவரைப் பற்றி விவரிக்கிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு...

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள் உடன்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. குடும்ப வறுமை காரணமாக இவரின் பெற்றோர் கேரளாவில் பணியாற்றிய நிலையில், சிவா மதுரை விக்கிரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

அதன் பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பபிரிவில் பட்டப்படிப்பு முடித்த சிவா அதனையடுத்து சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அதனைத்தொடர்ந்து தனியாக தொழில் தொடங்க எண்ணிய சிவா, தனது பள்ளி நண்பருடன் இணைந்து மதுரையில் ஒரு தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் 30 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கினார்.

தற்போது இந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா, சுவீடன், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் மட்டுமல்லாது, இதர நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு, ஷேர் மார்க்கெட் அப்ளிகேஷன், அலர்ட் ஆப், iot உள்ளிட்ட ஏராளனமான மென்பொருட்களை தயார் செய்து வழங்கி வருகிறார். குறிப்பாக இவர் உருவாக்கிய, ஷேர் மார்க்கெட்டைப் பற்றி எளிமையாக புரிந்துகொள்ளும் வகையிலான ஆப், மாணவர்களின் நகர்வுகளை ஜிபிஎஸ் இல்லாமல் கண்டறிய உதவும் Internet of thinks ஆப் உள்ளிட்டவை தற்போது வரவேற்பை பெற்றுள்ளன.

இது குறித்து சிவா கூறும்போது, ' என்னை போன்று அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது லட்சியம். ஆகையால் அதுபோன்ற மாணவர்களையே நாங்கள் பணியமர்த்தி உள்ளோம். அவர்களுக்கு பயிற்சி வழங்கும் காலங்களில்கூட, ஊதியம் வழங்குவதால் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரிக்கிறது.சென்னை, பெங்களூரு போன்று மதுரையிலும் தகவல் தொழில் நுட்ப துறையை வளர்த்தெடுத்து கிராமப்புற இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க இருக்கிறோம். பட்டயப்படிப்பு கட்டாயம் என்றில்லை. நல்ல புரிதல், சமயோஜித சிந்தனை இருந்தால் அவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்' என்றார்.