Skip to content

SUPER GOVERNMENT SCHOOL |MUDAIYUR AIDED SCHOOL:

மாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்

திருக்கழுக்குன்றம் அருகே, முடையூர் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில், ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் வேன் ஏற்பாடு செய்து, மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.திருக்கழுக்குன்றம் அடுத்த, மாம்பாக்கம் ஊராட்சி, முடையூர் கிராமத்தில், அரசு உதவி பெறும், ஜார்ஜ் வேணுகோபால் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1950ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஏற்படுத்தப்பட்டு, 1954ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
எண்ணிக்கை குறைவு 
இப்பள்ளியில் வழுவதுார், காட்டூர், கிளாப்பாக்கம், தத்தளூர், நரப்பாக்கம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்தனர். தற்போது அந்த கிராமங்களில், புதிய தொடக்கப்பள்ளிகள் வந்துள்ளதால், இப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.
வரவேற்பு
இப்பள்ளியின் மாணவர்களை தக்க வைக்கும் விதத்தில், தலைமையாசிரியர் தலைமையில், ஆசிரியர்கள் அனைவரும், வீடு வீடாக சென்று, பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, துண்டு பிரசுரம் கொடுத்தனர்.ஒரு வழியாக, 45 மாணவர்கள் சேர்ந்தனர். அவர்களை தங்கள் பள்ளியில் தக்க வைக்க, பள்ளி வந்து செல்ல, வாகன வசதியை ஏற்படுத்த முடிவு செய்தனர்.
இதற்காக ஆசிரியர்கள் தங்கள் வருமானத்தில், 10 சதவீதத்தை ஒதுக்கி, மாருதி வேன் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்; பாதுகாப்பாக திரும்ப வீடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.மாணவர்களை பள்ளியில் தக்க வைக்க, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள இந்த முயற்சிக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் வரவேற்பு உள்ளது.பழைய விலைக்கு, மாருதி வேனை, விலை கொடுத்து வாங்கியுள்ள தலைமையாசிரியர், அதற்கான, டீசல் மற்றும் பராமரிப்பு செலவை, ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.