Skip to content

7TH PAY COMMISSION | JACTTO GEO NEXT MOVEMENT:

ஊதிய முரண்பாட்டுக்குத் தீர்வு வேண்டும், இல்லையேல் போராட்டம்’: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில், '7-வது ஊதியக்குழுவும் ஏமாற்றமும்' என்ற தலைப்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விளக்கக்கூட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் மண்டலச் செயலாளர் பேராசிரியர் குமார், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் சேதுசெல்வம் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினார்கள்.


கூட்டத்தில் பேசியவர்கள், "தமிழக அரசு அமைத்த ஊதியக்குழு, தனது பரிந்துரையை தமிழக முதல்வரிடம்  சில தினங்களுக்கு முன் அளித்தது. இதை ஆராய்ந்த முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக்குழு ஒப்புதல் தந்ததன் அடிப்படையில், ஊதிய உயர்வு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதில், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல், பல்வேறு குறைபாடுகளுடன் அறிவித்துள்ளதாகப் புகார்கள் எழுந்தன. ஜாக்டோ-ஜியோ சார்பாக குறைபாடுகளைக் களைந்து, துணை அரசாணை வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கைவைக்கப்பட்டது. குறிப்பாக, இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடந்த ஊதியக்குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளைக் களையாமல் அறிவித்துள்ளதால், அடிப்படை ஊதியத்தில் 15 ஆயிரத்துக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய விகிதம் என்று அறிவித்துவிட்டு, அனைத்து வகை ஊழியர்களுக்கும் குறைவான ஊதிய விகிதமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு இதைச் சரிசெய்து புதிய அரசாணை வெளியிட வேண்டும். இல்லையேல், வரும் 23-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது இதுகுறித்து முறையிட உள்ளோம்.

நீதிமன்றம் சாதகமான பதிலை அளிக்கும் என நம்புகிறோம். எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையெனில், நீதிமன்ற அனுமதியுடன் அடுத்த கட்ட போராட்டம்குறித்து மாநில மையம் கூடி முடிவெடுக்கும்” என்றார்.