Skip to content

BIRTH CERTIFICATE NEW SOFTWARE REGARDING:

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பதிவிறக்க விரைவில் புதிய சாப்ட்வேர்:

தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள வசதியாக புதிய சாப்ட்வேர் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களை வரன்முறைபடுத்துதல் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.அதில், அரசின் அனைத்து சேவைகளும் மின் ஆளுமை திட்டத்தின் கீழ் புதிய சாப்ட்வேர் மூலமாக உடனுக்குடன் பதிவு செய்து உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு சென்று சேர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், இசேவை மையங்கள் அமைக்கப்பட்டு பிறப்பு, இறப்பு, வருமான, சாதி, இருப்பிடம், மற்றும் வரி வசூலினங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான மெயின் சர்வர் சென்னையில் உள்ள சுகாதாரத் துறை இயக்குனர் அலுவலகத்தின் நேரடி கண்காணிப்பில் வைக்கப்பட்டது.இதனிடையே சாப்ட்வேரில் திடீர் குளறுபடிகள் ஏற்பட்டது. சிக்னல் பழுது காரணமாக பிறந்த குழந்தைகளின் தகவல்களை பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. ஒருநாள் என தொடர்ந்த பிரச்னை ஒரு மாத்திற்கும் மேல் நீடித்ததால் அலுவலர்கள் பலரும் நிர்வாக குளறுபடியில் சிக்கித் தவித்தனர். பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர்.

இந்நிலையில் இணையதள சாப்ட்வேரில் ஏற்பட்ட குளறுபடிகளை சீர் செய்யும் விதமாக சென்னையை தவிர்த்து ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் வழங்கும் சேவை தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகம் முழுவதும் பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான இணைய சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு என தனித்தனி சாப்ட்வேர்கள் உள்ளதால் அதனை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக பிறப்பு சான்றிதழ் ஆன்லைனில் விண்ணபிக்க தமிழகம் முழுவதும் ஒரே சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதன்மூலமாக பிறப்பு சான்றிதழ் பெற வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் என குழந்தைகள் எங்கு பிறந்திருந்தாலும், எந்த இடத்தில் இருந்தும் விண்ணப்பித்து ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதற்கான தனி சாப்ட்வேர் இம்மாதம் இறுதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றனர்.