Skip to content

SCHOOL EDUCATION DEPARTMENT SYLLABUS CHANGE NEWS:

தமிழக பள்ளிகளில் மும்மொழி பாடத்திட்டம் அடுத்த ஆண்டில் அமல்படுத்த ஆலோசனை

தமிழகத்தில், மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள், ஆலோசனை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும், பல மாநிலங்களில், மும்மொழி பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளது. 
மூன்று மொழிகள் : இதன்படி, மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் தேசிய அளவில் ஹிந்தி என, மூன்று மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இவற்றில், சில மாநில பாடத்திட்ட பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், பிரெஞ்ச், ஜெர்மன், ரஷ்ய மொழிகளில் ஒன்று, மூன்றாவது மொழியாக கற்று தரப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டு முதல், மூன்றாம் மொழியாக பிறநாட்டு மொழிக்கு பதில், இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு மொழியை, கூடுதலாக படிக்க வைக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாடத்திட்டம் : இந்நிலையில், தமிழகத்தில், பாடத்திட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதில், பாடத்திட்டம் மட்டுமின்றி, மொழி வாரியாகவும் மாணவர்களுக்கு கூடுதல் வசதி கிடைக்கும் வகையில், மூன்று மொழிகளை கற்பிக்கலாம் என, கல்வியாளர்கள் சிலர், பாடத்திட்ட கமிட்டியிடம் மனு அளித்துள்ளனர்.
மத்திய அரசின், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகளும், மும்மொழி திட்டத்தை கொண்டு வர ஆலோசனை வழங்கி உள்ளனர். 
எனவே, புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தும் போது, மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்தலாமா என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
ஆறாம் வகுப்பு வரை அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில், தாய்மொழி வழியிலும், பின், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப, ஆங்கில வழியிலும் பாடம் படிக்க, மாணவர்களுக்கு வசதி செய்யலாமா என்றும், பரிசீலிக்கப்படுகிறது.
தமிழ் கட்டாயம் : இந்த திட்டம் வந்தால், தமிழ் கட்டாயமாகும். இரண்டாவது மொழியாக, ஆங்கிலமும், பின், ஹிந்தி, அரபிக், சமஸ்கிருதம், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என, பிறமொழிகளில் ஏதாவது ஒன்றும், அரசு பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படும் வாய்ப்புள்ளதாக, அரசு வட்டாரங்கள் தெரிவித்துஉள்ளன.