நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். குரு பகவானுக்கு என்ன பிடிக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று குரு பயோடேட்டாவை பார்க்கலாம்.
பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக் கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை பொன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். தயாள குணம் கொண்டவர்.
குரு பகவானின் 5, 7,9ஆம் பார்வை சகல நன்மைகளையும் தரும். திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர்.
யானையை வாகனமாக கொண்ட குருபகவானுக்கு, கொண்டைக் கடலை பிடித்த உணவு. நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பவர். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். அது தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் அதிபதி இவர் என்பதை குறிப்பிடுகிறது.
குரு பகவான் நீதிமானாகவும் திகழ்கிறார். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் 'மகா மகம்' நடக்கிறது.
குரு பகவான் பயோடேட்டா
சொந்த வீடு: தனுசு - மீனம்
உச்ச வீடு : கடகம்
நீச்ச வீடு : மகரம்
கிழமை : வியாழன்
தேதி : 3, 12, 21, 30
நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம் : தூய மஞ்சள்
ரத்தினம் : கனக புஷ்பராகம்
உலோகம் : தங்கம்
தானியம் : கொண்டைக்கடலை
ஆடை : மஞ்சள்
தசாபுத்தி காலம்: 16 ஆண்டு
அதிதேவதை : தட்சிணாமூர்த்தி
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து குருபகவானை வணங்கி சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் தானமாக வழங்கலாம்.
source: oneindia.com