Skip to content

7.5% உள் ஒதுக்கீட்டால் 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்!

 

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதற்கு முன்பே தமிழக அரசு அந்த சட்ட மசோதாவுக்கான அரசாணையை வெளியிட்டது. மருத்துவம் படிக்க மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "தமிழகத்தில் இந்த ஆண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 18-ம் தேதி அல்லது நவம்பர் 19-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கப்படலாம். ஒரு நாளைக்கு 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ் சில் 304, பி.டி.எஸ் சில் 91 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 16-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்." என்று கூறியுள்ளார்.