Skip to content

மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்:

 

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் தர வரிசைப் பட்டியலில் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவர்களில் பலரும் குடும்ப பின்னணி, வறிய நிலை வாழ்க்கைச் சூழல் போன்ற தடைகளைத் தகர்த்து முன்னேறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் ஆணையைத் தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (நவம்பர் 16) வெளியிட்டார்.

இந்நிலையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அடிப்படையில், அரசு பள்ளி மாணவர்கள் 405 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு நீட் தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களில் 4 பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், நடப்பாண்டில் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் மருத்துக் கல்லூரியில் இடம் பெற்றிருப்பது மாணவர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சில்வார்பட்டியை சேர்த்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி தட்சணாமூர்த்தி என்பவரது மகன் ஜீவித் குமார். இவர் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வில் 664 மதிப்பெண் பெற்று 7.5 சதவீத தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தைச் சேர்த்த சாமிதுரை என்ற விவசாய கூலித் தொழிலாளியின் மகன் அன்பரசன். இவர் நீட் தேர்வில் 646 மதிப்பெண் பெற்று, தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

அன்பரசன், தச்சூர் கிராமம் - கள்ளக்குறிச்சி

அதிலும் இவர் தனியார் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே படித்து, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது பெற்றோர் இருவரும் தன்னை மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக அனைத்து முயற்சிகளுக்கும் துணையாக இருந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறப் பெரிதும் உதவியதாக கூறுகிறார் அன்பரசன்.

"நான் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தான் படித்து வந்தேன். 12ஆம் வகுப்பு வரும் வரை எனக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆர்வம் இல்லை. ஆனால், எங்கள் பள்ளியிலே அதிக மதிப்பெண் பெற்று அனைத்து பாடங்களிலும் சிறந்து விளங்கினேன். இதன் காரணமாக என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் கலாபன் என்ற இயற்பியல் ஆசிரியர் என்னை மருத்துவ படிப்பில் கவனம் செலுத்தக் கூறினார். நம்மைப் போன்று அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களும் மருத்துவர்களாக வரவேண்டும் என அதிகமாக ஊக்கப்படுத்தினார்.

அதன் பிறகு அரசு பள்ளியில் வாரம் தோறும் நடைபெறும் நீட் தேர்வு பயிற்சிக்குச் செல்ல தொடங்கினேன். பிறகு நீட் தேர்வை முதல் முதலாக எழுதியபோது 130 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். அதன் பிறகு ஓராண்டு விட்டிலிருந்தே நீட் தேர்விற்குப் படிக்க தொடங்கினேன். அதில், 440 மதிப்பெண் பெற்றேன், அப்போது அரசு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை," என்கிறார் அவர்.

நான் எடுத்த மதிப்பெண் அடிப்படையில், தனியார் கல்லூரியில் 7 முதல் 8 லட்சம் வரை பணம் செலுத்திப் படிப்பதற்காக வாய்ப்பு கிடைத்தது. ஆனால், எனது குடும்பச் சூழல் காரணமாக பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாது என்பதால், என்னை மீண்டும் படிக்கப் பெற்றோர் ஊக்கப்படுத்தியதாக கூறுகிறார் அன்பரசன்.

"அதன் பிறகு, மேலும் ஒரு ஆண்டு தொடர்ந்து வீட்டிலிருந்தே படித்து 644 மதிப்பெண் பெற்றேன். இதனிடையே இந்த முறை நீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற காரணத்தினால், என்னால் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் (MMC) படிக்க வேண்டும் என்ற கனவு கைக்கூடாது என்று இருந்தேன். ஆனால், இந்த 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலமாக எனக்கு MMCல் படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக, அரசு பள்ளி மாணவர்களால் எதுவுமே முடியாது என்பதில்லை. கடினமாக உழைத்தால் அனைத்தும் சாத்தியமே. கஷ்டப்படுவதற்கு பயந்தே அதிக மாணவர்கள் படிக்காமல் இருக்கின்றனர். ஆனால், தற்போது இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருப்பதால், எதிர்காலத்தில் அதிகமான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பார்கள்," என அன்பரசன் கூறுகிறார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதிக்கு உட்பட்ட சேப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் என்ற மாணவன், நீட் தேர்வில் 515 மதிப்பெண் பெற்றுள்ளார். இதனால் 7.5 இட ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் 9வது இடத்தை பெற்று இருக்கிறார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், பெற்றோரின் கடின உழைப்பால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிந்துள்ளதாக கூறுகிறார்.

சரத் குமார், வேப்பூர் - கடலூர்

"எனது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டப்படிப்பு படித்ததில்லை. வறுமை சூழல் காரணமாக எனது தாய் மற்றும் தந்தை 10ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. எனது பெற்றோர் என்னை எப்படியாவது ஏதாவதொரு பட்டப்படிப்பு படிக்க வைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தனர். அவர்களுடைய கடினமான சூழலுக்கு இடையே என்னைப் படிக்க வைத்தனர். தற்போது எனது குடும்பத்தில் நான் தான்‌ முதல் முறையாக பட்ட‌ப்படிப்பு படிக்க இருக்கிறேன். அதிலும் மருத்துவ படிப்பு படிக்கப் போகிறேன் என்று நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்கிறார் சரத்குமார்.

"கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த பிறகு முதல் முறையாக நீட் தேர்வு எழுதியதில் 167 மதிப்பெண் மட்டுமே பெற்றேன். ஆனால், மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற நோக்கத்தை உணர்ந்த எனது பெற்றோர் நாங்கள் இருக்கும் வீட்டை விற்றாவது உன்னை வெளி நாடுகளில் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறோம் என்றனர். எனது பெற்றோரிடம் ஒரு ஆண்டு நேரம் கேட்டு இந்த வருடம் நான் நீட் தேர்விற்காக முழுமையாகப் படித்து, அடுத்து வரும் தேர்வில் மீண்டும் முயற்சி செய்கிறேன் என்றேன். அதற்கு எனது பெற்றோர் உதவினர்," என்றார்.

எனது பெற்றோர் கடும் கஷ்டத்திற்கு இடையே என்னைப் படிக்க வைக்கும் போது, எங்களது கிராமத்தில் சிலர் ஒன்றும் இல்லாதவர்களுக்கு எதற்கு இந்த ஆசை என்று கூறுவார்கள். இதனால், எப்படியாவது நல்ல முறையில் படித்து இவர்கள் அனைவரின் முன்பும் தேர்வாக வேண்டும் என தந்தை அவரது கஷ்டத்தைத் தெரிவித்தாலும், என்னை அதிகமாக ஊக்கப்படுத்தியதே எனது வெற்றிக்கு உதவியதாக சரத்குமார் தெரிவிக்கிறார்.

இவரை அடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில், இந்த தரவரிசை அடிப்படையில் ஜெயபிரியா என்ற மாணவிக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இவர், தனியார் நீட் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லாமல், அரசு பள்ளிகளில் கொடுத்த பயிற்சி வகுப்பு மற்றும் வீட்டிலிருந்தே படித்து முதல் முயற்சியிலேயே மருத்துவ படிப்பிற்குத் தேர்வாகியுள்ளார். நீட் தேர்வில் 299 மதிப்பெண் பெற்ற ஜெயபிரியா தரவரிசை பட்டியலில் 103வது இடத்தை பெற்றுள்ளார்.

ஜெயபிரியா, சங்கராபுரம் - கள்ளக்குறிச்சி

இது குறித்து தெரிவித்த மாணவி ஜெயபிரியா, "என் அப்பா பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். மேற்கொண்டு என்னை சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்பிப் படிக்க வைக்கும் சூழ்நிலை எனது பெற்றோரிடம் இல்லை. எனது தந்தையின் அன்றாட வருமானத்தில் தான் நான் உட்பட மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனைக் கவனித்து வருகின்றனர். எனது தந்தையை எப்போதாவது தான் வீட்டில் பார்க்க முடியும். இரவு நேரங்களிலும் அவருக்கு வேலை இருக்கும் என்பதால் அவர் வீட்டிற்கு வந்து ஓய்வெடுக்கும் நேரங்களில் கூட என்னை ஊக்கப்படுத்துவார்," என்கிறார் ஜெயபிரியா.

"இந்த 7.5 சதவீத ஒதுக்கீடு மூலம் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது இல்லை என்றால் எனக்கு இதுபோன்று கிடைத்திருக்குமா என்று உறுதியாக சொல்லமுடியாது.

அதிலும், எனது பள்ளி நிர்வாகம் எனக்குப் பெரிதும் உதவியது. அதன் காரணமாகவே என்னால் முதல் முயற்சியிலேயே தேர்வாக முடிந்தது. என் படிப்பிற்கு என்ன தேவை என்று ஒவ்வொன்றையும் எனது சகோதரி இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொடுத்து எனக்கு உதவியாக இருந்தார்," என தெரிவிக்கிறார் அவர்.

தற்போது நான் தேர்வாகியதைத் தொடர்ந்து எனது சகோதரிகள் மற்றும் எங்கள் கிராமத்தைச் சேர்த்த மாணவர்களுக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. நான் படித்த பள்ளியிலும், எனது கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கும் என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர். எங்கள் கிராமத்தில் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக ஜெயபிரியா கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: