Skip to content

பெற்றோர்களே எச்சரிக்கையாக வண்டி ஓட்டுங்கள்- குட்டி போலீஸ் உங்களைக் கண்காணிக்கிறது

இத்தனை நாட்களாக ப்ரோக்ரஸ் கார்டைப் பார்த்து மாணவர்கள்தான் பயப்பட்டார்கள். இனி பெற்றோர் பயப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது'
அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோர் எப்படி வண்டி ஓட்டுகிறார் என்பதைக் கவனித்து சான்றிதழ் அளிக்கின்றனர். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியரிடம் அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆரம்பித்துள்ளது. வரும் காலங்களில் இந்த முறை மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.


இந்தத் திட்டத்தின்படி, பள்ளி ஆசிரியர்கள் மதிப்பீட்டு அட்டை ஒன்றை மாணவர்களுக்கு அளிப்பர். அதில், மாணவர்கள் தங்களின் பெற்றோருடன் செல்லும் பயணங்கள் குறித்து மாதத்துக்கு 12 முறை மதிப்பிட வேண்டும்.

பாதுகாப்பு விதிமுறைகள்


தங்களின் பெற்றோர் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிடுகிறார்களா, வண்டி ஓட்டும்போது போன் பேசாமல் இருக்கிறார்களா, ஹெல்மெட் / சீட் பெல்ட் அணிகிறார்களா, சரியான முறையில் ஓவர்டேக் எடுக்கின்றனரா, ஹாரன் அடிக்கிறார்களா மற்றும் பிற விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்று மாணவர்கள் கண்காணிக்க வேண்டும்.
பின்னர் அதை அட்டையில் மதிப்பிட்டு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அவை மாதக் கடைசியில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். நல்ல மதிப்பெண்கள் வாங்கிய பெற்றோருக்குப் பரிசுகளும், குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.

1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் சாலை விதிகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை ஆசிரியர்களே கண்காணித்து மதிப்பிட உதவுகின்றனர். அதே நேரம் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்கள் மதிப்பீட்டு அட்டையை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 200 மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 'குட்டி போலீஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.


ஒருவழிச் சாலையில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த மாணவர்களே ட்ராபிக் போலீஸ் போல சீருடை அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்யவும் பள்ளி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

''எங்க டீச்சர்களும் ரூல்ஸ ஃபாலோ பண்றாங்களான்னு செக் பண்ணுவோம்'' என்று பற்கள் தெரியச் சிரிக்கிறார் பாடியநல்லூர் அரசுப்பள்ளி மாணவி ஒருவர்.